242. அருள்மிகு வாசீஸ்வரர் கோயில்
இறைவன் வாசீஸ்வரர், பாசூர்நாதர்
இறைவி தங்காதலி அம்மன், பசுபதி நாயகி
தீர்த்தம் சோம தீர்த்தம்
தல விருட்சம் மூங்கில்
பதிகம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்
தல இருப்பிடம் திருப்பாசூர், தமிழ்நாடு
வழிகாட்டி திருவள்ளூரிலிருந்து 7 கி.மீ. தொலைவில் திருவள்ளூர் - திருத்தணி நெடுஞ்சாலையில் உள்ளது. திருவள்ளூரில் இருந்து நேரடி பேருந்து வசதி உண்டு.
தலச்சிறப்பு

Thirupasur Gopuramமூங்கில் மரங்கள் நிறைந்த காடாக இருந்ததால் இத்தலம் 'திருப்பாசூர்' என்று அழைக்கப்படுகிறது. பாசு - மூங்கில். இங்கு மேய்ச்சலுக்கு வந்த பசுக்கள் ஒரு மேட்டின் மீது பால் சொறிந்தது. இதைக் கண்ட மாடு மேய்ப்பவன், அரசனுக்குத் தகவல் அளித்தான். அரசனும் அங்கு வந்து அந்த மேட்டை வாசி என்னும் கருவி கொண்டு தோண்ட, உள்ளிருந்த லிங்கத்தின்மீது பட்டு இரத்தம் கசிந்தது. அரசன் தனது தவறை உணர்ந்து வேண்ட, இறைவனும், 'இங்கு ஒரு கோயில் எழுப்புக' என்று அசரீரியாக அருளினார். அரசனும் அவ்வாறே செய்தான். 'வாசி' என்னும் கருவியால் வெட்டுண்டதால் இத்தலத்து மூலவர் 'வாசீஸ்வரர்' என்ற பெயர் பெற்றார்.

மூலவர் 'வாசீஸ்வரர்', 'பாசூர் நாதர்' என்னும் திருநாமங்களுடன், சதுர வடிவ ஆவுடையுடன் லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். வாசி என்னும் கருவி வெட்டியதால் பாணம் வெட்டுப்பட்டது போல இடப்புறம் வளைந்து காணப்படுகிறது. அம்பாள் 'தங்காதலி அம்மன்', 'பசுபதி நாயகி' என்னும் திருநாமங்களுடன் தரிசனம் தருகின்றாள். சுவாமி சன்னதியும், அம்பாள் சன்னதியும் அருகருகே அமைந்துள்ளன. இதைத் திருமணக் கோலம் என்று கூறுவர்.

Tirupasur Utsavarகோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை, சண்டேஸ்வரர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தேவசேனா சமேத ஆறுமுக சுவாமி, நடராஜர், பைரவர் தரிசனம் தருகின்றனர்.

ஒருசமயம் மகாவிஷ்ணு 16 செல்வங்களில் 11 செல்வங்களை இழந்து விட்டார். அதனால் அவர் சிவபெருமானை வேண்ட, அவரது கூறியபடி இத்தலத்திற்கு வந்து 11 விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட்டு இழந்த செல்வங்களைப் பெற்றதாகத் தல வரலாறு கூறுகிறது. அதனால் இக்கோயிலில் 11 விநாயகர்கள் ஒன்றாக அமர்ந்துள்ள 'விநாயகர் சபை' ஒன்று அமைந்துள்ளது.

கரிகாலச் சோழன் காலத்தில் இப்பகுதியில் ஆட்சி செய்து வந்த குறும்பன் என்னும் அரசன் கப்பம் கட்ட மறுத்தான். சோழன் படையெடுத்து வர, தன் பக்தனான குறும்பன் வேண்ட, அவனுக்கு உதவியாக காளி தேவி போருக்கு வந்தாள். கரிகாலன் சிவபெருமானிடம் உதவி செய்ய வேண்டினான். அவரும் நந்தி தேவரை அனுப்பி காளியின் கோபத்தை அடக்கி இரண்டு கால்களிலும் பொன் விலங்கைப் பூட்டி அமைதிப்படுத்தினார். அதனால் இத்தலத்தில் உள்ள காளி 'சொர்ண காளி' என்ற பெயருடன் காட்சி அளிக்கின்றாள். பௌர்ணமி தோறும் மாலை நேரத்தில் இவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

திருஞானசம்பந்தர் ஒரு பதிகமும், திருநாவுக்கரசர் இரண்டு பதிகங்களும் பாடியுள்ளனர். இக்கோயில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com